×

‘கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா..’ என கோஷம் விண்ணை பிளக்க முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்

சென்னை: ‘கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா’ என கோஷம் விண்ணை பிளக்க முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். புகழ்பெற்ற முருகன் திருத்தலங்களுள் ஒன்றான திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் பல்லக்கு உற்சவமும், இரவில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக சஷ்டி விரதத்தின் இறுதி நாளான நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து உள்பிரகாரம், வெளிப்பிரகாரம், ஓம்கார மண்டபம் ஆகியவற்றில் 108 முறை சுற்றி வந்து தங்களது விரதத்தை நிறைவு செய்தனர். இதையொட்டி பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில் பக்தர்களுக்கு பால் வழங்கப்பட்டது. பகல் 12 மணியளவில் சரவண பொய்கையில் தீர்த்தவாரி நடைபெற்றது. முருகப்பெருமாள் எழுந்தருளி குளத்தில் நீராடினார். இதைத் தொடர்ந்து படித்துறையில் காத்திருந்த பக்தர்களும் சரவண பொய்கையில் நீராடியும், புனித நீரை தலையில் தெளித்தும் தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

மாலை 6 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் தங்கவேல் கொண்டு போர்க்கோலத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்தார். இதைக்காண பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர். மேலும், வீரபாகு வேடம் அணிந்தவர்களும் தங்கள் கைகளில் வைத்திருந்த வேல் மூலம் 6 அசுரன்களையும் தாக்கினர். இதையடுத்து பிரம்மாண்ட தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு சஷ்டி பாயசம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் நான்கு மாடவீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சூரசம்ஹார நிகழ்ச்சியையொட்டி மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. சுப்பாராஜி, திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருப்போரூர் பேரூராட்சி சார்பில் பக்தர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மேலும், பொது சுகாதாரத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இன்று மாலை 6 மணிக்கு முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. 1000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. அத்துடன் கொடியிறக்கப்பட்டு சூரசம்ஹார விழா நிறைவு பெறுகிறது. இதேபோல், காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலும் கந்த சஷ்டி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இதேபோல் சென்னை வடபழனி முருகன் கோயில், பாரிமுனை கந்தகோட்டம் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kondan ,Murugan , 'Kandan is Aragora .. Murugan to Arora ..' chorus splash the sky to Murugan temples in Churasamharam
× RELATED திருத்தணி முருகன் கோயிலுக்கு...